×

ஃபினான்ஷியல் ஃப்ரீடம் பெண்களுக்கு அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் தங்களின் தரத்தினை பல வழிகளில் உயர்த்தி காட்டியுள்ளனர். உதாரணத்திற்கு படிப்பு, வேலை, சொந்த தொழில் என அனைத்திலும் தங்களுக்கான முத்திரையை இவர்கள் பதித்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் எவ்வளவுதான் தங்களை உயர்த்திக் காட்டினாலும், தங்கள் தேவைக்கு அதிகமாக வருமானம் ஈட்டினாலும், சுதந்திரமாக தன் வேலைகளை செய்தாலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தங்களின் பெற்றோரையோ, கணவரையோ அல்லது குடும்பத்தில் இருப்பவர்களையோ சார்ந்துதான் இருக்கின்றனர். இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க தன்னால் இயன்றவரை விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார் உளவியல் ஆலோசகர் டாக்டர் டெல்பின் ஸ்டெபினோ. இவர் ‘ஸ்மைல் இன் கவுன்சிலிங்’ என்ற பெயரில் உளவியல் ஆலோசனை மையம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘2014 வரை நானும் ஒரு சாதாரண வாழ்வினைதான் வாழ்ந்து வந்தேன். ஆனால் அந்த ஆண்டு என்னுடைய வாழ்க்கையையே திருப்பி போட்டது எனக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோய் (Muscular Dystrophy). இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டால் தசைகள் அனைத்தும் இறுகப் பிடித்துக்கொள்ளும். ஒரு இடத்தில் இருந்து நகர முடியாது. என்னுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று நான் நினைத்து இருந்தால் நான் அப்படியே என்னுடைய சக்கர நாற்காலியிலே முடங்கி போய் இருப்பேன்.

ஆனால், அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கேன். இப்போது நான் பெண்களுக்கான நிதி மேம்பாடு, அவர்களின் நிதி சுதந்திரம் மற்றும் குழந்தைகளுக்கான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன். யாருடனும் பேச பிடிக்காமல், தனிமையில் இருந்தேன். அந்த மனநிலையில் இருந்து நான் மீண்டு வர எனக்கு நான்கு வருடமானது. என்னுடைய அந்த நிலையிலும் நான் இப்போது காணும் ஒவ்வொரு வெற்றிக்கும் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்தான் காரணம்.

அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கைதான் 2018ல் சென்னைக்கு என்னை தனியாக பயணிக்க வைத்தது. இங்கு அரசு துறையில் ஹெல்த் கவுன்சிலரா வேலை பார்த்தேன். பலர் உடலில் எந்தவித குறைபாடும் இல்லை என்றாலும், ஒரு சில காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அது அவர்களை தற்கொலை ெசய்யும் அளவிற்கு தூண்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நான் பக்கபலமாக இருக்க விரும்பினேன். காரணம், நானும் மிகப்பெரிய துயரத்தில் இருந்துதான் மீண்டு வந்திருக்கிறேன். மீள முடியாத துயரத்தில் இருப்பவர்களை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்த ஆலோசனை மையத்தினை ஆரம்பித்தேன்.

இதன் மூலமாக மாணவர்களுக்கும், பெண்களுக்கும், தற்கொலை எண்ணம் உள்ள சிலருக்கும் மன ரீதியாகவும், ஆரோக்கியம் சார்ந்து என்னால் முடிந்தவரை அறிவுரை வழங்கி வருகிறேன். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குகிறேன். பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிக்கு சென்று நேரடியாகவே விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்கிறேன்’’ என்ற டெல்பின், பெண்கள் நிதி சார்ந்த விஷயத்தில் எவ்வாறு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பகிர்ந்தார்.

‘‘பெண்கள் அனைத்து விஷயத்திலும் சுதந்திரமாகவும், தனக்கு தேவையானதை அடைய எதிர்த்துப் போராடும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். நான் வேலைக்கு போகிறேன், சம்பாதிக்கிறேன், என் தேவைகளை என்னால் பார்த்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் சொன்னாலும், அவர்கள் புரிந்துகொள்ள முடியாத விஷயம் ஃபினான்ஷியல் ஃப்ரீடம். ஒரு பெண் தன் சம்பாத்தியத்தில் சுதந்திரமாக இருக்கலாம், தன் தேவைகளை தானே பார்த்துக்கொள்ளலாம், அவர்களின் செலவுகளில் மூன்றாம் நபரின் தலையீடு இருக்காது என்று நினைக்கலாம்.

ஆனால் சில பெண்கள் தங்களின் சம்பாத்தியத்தை தன் பெற்றோர் அல்லது கணவரிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்களின் தேவைக்கு கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். இது ஃபினான்ஷியல் ஃப்ரீடம் கிடையாது. அதே சமயம் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் நினைத்த நேரத்தில் வாங்க முடிகிறதோ அப்ேபாதுதான் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கருதலாம். நிதி சார்ந்து சுந்திரமாக செயல்படும் பெண்ணிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். பெண்கள் பொருளாதாரம் சார்ந்து சுதந்திரமாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே கட்டுப்படுத்த முடியும்’’ என்றவர் பெண்கள் தங்களுக்கான நிதியினை எவ்வாறு சேமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

‘‘வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு பல வழிகளில் சேமிக்க முன்வருகிறார்கள். அதாவது நகை அல்லது பணச் சீட்டு போடுவது, வரவிற்காகவே மட்டும் ஒரு வங்கிக் கணக்கினை இயக்குவது, நகைகள் மேல் முதலீடு செய்வது, நிலம் அல்லது வீடுகள் வாங்குவது. வேலைக்கு போகும் பெண்கள் ஒரு பக்கம் யோசித்தால், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன் மாதச் செலவிற்கு கொடுக்கும் பணத்தினைக் கொண்டு பலவழிகளில் சேமிக்க திட்டமிடுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இல்லத்தரசியாக இருப்பவர்கள் சிறுகச் சிறுக சேமிப்பதில் மிகவும் சாமர்த்தியமாக இருப்பார்கள்.

ஃபினான்ஷியல் ஃப்ரீடம் பற்றி சொல்லும் நேரத்தில் கண்டிப்பாக எமோஷனல் ஃப்ரீடம் குறித்தும் நான் சொல்ல வேண்டும். ஃபினான்ஷியல் ஃப்ரீடம் பற்றிய விழிப்புணர்வின் போது பல பெண்கள் என்னிடம் நான் சம்பாதிக்கிறேன். சுதந்திரமாக செயல்படுகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நாங்க அனைவரும் எங்களின் குடும்பத்தை சார்ந்துதான் இருக்கிறோம் என்றனர். நிதி மற்றும் உணர்வுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. இல்லத்தரசிகளின் கருத்தினை வீட்டில் இருப்பவர்கள் யாரும் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை அந்த சமயத்தில் அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். தொடர்ந்து உணர்வுகள் அடிபடும். ஆனால் அதே சமயம் வேலைக்கு போகும் பெண்கள் சொல்லும் கருத்துக்கு மதிப்புண்டு.

அவர்கள் சொல்வதை செயல்படுத்தவும் தயங்கமாட்டார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். இதனால்தான் பெண்களுக்கு படிப்பு மற்றும் வேலை அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் தொழில் செய்யலாம். அதற்கான பல வழிகள் உள்ளன. தங்களின் பொழுதுபோக்கு என்று நினைக்கும் அனைத்தையும் தொழிலாக மாற்றி அமைக்கலாம்.

வேலைக்கு போனாலும், பெண்களுக்கு தங்களின் குடும்பம்தான் எல்லாம். அதனால் அவர்கள் தங்களை சரியாக பார்த்துக் கொள்ள கூட தவறிவிடுகிறார்கள். பெண்கள் தங்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டால், அவர்களின் மனநிலை என்றும் இளமையாக இருக்கும். என்னை பொறுத்தவரை ஒரு பெண் எப்போது தன்னுடைய உணர்ச்சி மற்றும் நிதி இரண்டையும் சரியாக சமாளிக்கிறார்களோ அப்போது அவர்கள் சுதந்திரம் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்’’ என்ற டெல்பின் கடந்த ஆண்டு இளம் தொழில்முனைவோர் விருது மற்றும் Young Entrepreneur Award மற்றும் இந்தாண்டின் ஐக்கான் என்ற விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ஃபினான்ஷியல் ஃப்ரீடம் பெண்களுக்கு அவசியம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்